கடலூர்,
கடலூர் மத்திய சிறையில் இருந்த 9 விசாரணை கைதிகள் திடீரென திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் விழுப்புரம் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.
நண்பர்கள்
கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 700க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் ரவுடி கேசவன் கொலை வழக்கில் சம்பந்நதப்பட்ட விசாரணை கைதிகளான அறிவழகன், சுரேந்தர், ராமு, சுரேஷ், தொப்பைவிஜி, ஆனந்து, சினுவாசன், முரளி, நாகூரன் ஆகிய 9 பேரும் கடந்த 5–8–2013 முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொலையுண்ட விழுப்புரம் ரவுடி ஏற்கனவே கடலூர் மத்திய சிறையில் இருந்துள்ளார். அதுசமயம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா (எ) வசுர் ராஜா மற்றும் சென்னையை சேர்ந்த என்னூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் இருந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
திருச்சி சிறைக்கு மாற்றம்
தற்பொழுது என்னூர் தனசேகரன் கடந்த 4 மாதங்களாகவும், வசுர் ராஜா 2 மாதங்களாகவும் கடலூர் மத்திய சிறையில் கைதிகளாக இருந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கேசவனின் நண்பர்கள் என்பதால் கேசவன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை கைதிகள் 9 பேருக்கும் ஏதேனும் ஆபத்து வரலாம் என சிறை அதிகாரிகள் கருதினர்.
இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மத்திய சிறையில் இருந்து 9 பேரையும் நேற்று பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment