Monday, September 09, 2013

கடலூர் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவில்
கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி சாலையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செல்வவிநாயகர் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடைசியாக கடந்த 1957–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. எனவே மிகப் பழமையான இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்தி ஆலய வழிபடுவோர் அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரூ.2½ கோடியில் இக்கோவில் புதுப்பித்து கட்டப்பட்டது. இதை அடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 2–ந் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாலிகை பூஜை, வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. கடந்த 7–ந் தேதி இரவு 7 மணிக்கு முதல் கால யாகபூஜையும், 8–ந் தேதி காலை 8 மணிக்கு 2–வது கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு 3–வது கால யாக பூஜையும் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு 4–வது கால யாக பூஜையும், அதைத் தொடர்ந்து பூர்ணாஹூதி, யாகவிசர்ஜனம் பூஜைகள் நடைபெற்றன. காலை 5 யாகசாலையில் இருந்து மேளதாள இசையுடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை எடுத்து சென்று கோவில் விமானங்களுக்கு அபிஷேகம் செய்தனர். இதைத் தொடர்ந்து மூலவர்கள் விநாயகர், திரவுபதி அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. நேதாஜிசாலை, வடக்கு கவரை தெருவில் பக்தர்கள் திரண்டு நின்றும், அடிக்குமாடி கட்டிடங்கள் மீது நின்றும் கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர்.  விழாவில் கடலூர் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணை தலைவர் சேவல்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் குமரன், செல்வவிநாயகர், திரவுபதி அம்மன் ஆலய வழிபடுவோர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ராஜேந்திரன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி கோட்டப்பொறியாளர் ரவி, நிர்வாக அதிகாரி வெங்கடேசன், தக்கார் கோவிந்தசாமி, கவுன்சிலர் சங்க உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை அடுத்து காலை 10 மணிக்கு மகா அபிஷகமும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
போக்குவரத்து மாற்றம்
கும்பாபிஷேக விழாவை காண கோவில் எதிரே உள்ள நேத்தாஜி சாலையில் பக்தர்கள் திரண்டு நின்றதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து புதுச்சேரி–கடலூர் இடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு புதுச்சேரில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஆல்பட்டை, குண்டுசாலை, செம்மண்டலம் வழியாக இயக்கப்பட்டன. மாலை நேரத்துக்கு பிறகு நேத்தாஜி சாலையில் பாதை திறந்து விடப்பட்டது.
(பாக்ஸ்)3 பெண்களிடம் 15 பவுன் நகைகள் திருட்டு
கோவில் கும்பாபிஷேகத்தை காண்பதற்காக நேத்தாஜி சாலை, தெற்குவர தெரு ஆகிய இடங்களில் பக்தர்கள் திரண்டு நின்றுகொண்டிருந்தனர். கூட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பங்களும் நடக்காமல் இருப்பதை கண்காணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மேலும் கோவின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. கும்பாபிஷேகம் முடிவடைந்ததும், புனித நீர் உடலில் பட வேண்டும் என்பதற்காகவும், நீரை பாட்டில்களில் பிடிப்பதற்காகவும் பக்தர்கள் முண்டி அடித்துக்கொண்டு சென்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் கடலூர் ஆல்பேட்டையை சேர்ந்த தங்கராசு மனைவி இந்திராணி(வயது 31) கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம மனிதன் பறித்துச்சென்று விட்டான். அதேபோல மஞ்சக்குப்பத்தை சேர்ந்த லலிதாவின்(63) கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியும், பரங்கிப்பேட்டை புதுக்குப்பத்தை சேர்ந்த அல்லி(56) என்பவரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியையும் யாரோ மர்ம மனிதர்கள் பறித்துச் சென்று விட்டனர். நகையை பறிகொடுத்த பெண்கள் கோவில் முன்பு நின்று கண்கலங்கியபடி நின்றனர்.

No comments: