Sunday, September 08, 2013

விரைவு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல நடவடிக்கை கோரி மனு

மயிலாடுதுறை - கோயமுத்தூர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலர் மருதவாணன் அறிக்கை:
மாவட்டத் தலைநகராக நகரின் மையத்தில் 3 லட்சம் மக்கள் தொகைக்கு போக்குவரத்து மேம்பாடு ஏற்படுத்தும் நிலையில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் உள்ளது.
பல சுற்றுலா மையங்களுக்கும், பாடல் பெற்ற பல கோவில்களுக்கும் செல்ல திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம்தான் ரயில் இணைப்புக்கு ஒரு முக்கிய இடமாக உள்ளது.
இந்த பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு பல விரைவு ரயில்கள் நின்று செல்லாமல் உள்ளன.
சென்னை - ராமேஸ்வரம் (16701), சென்னை - காரைக்கால் (16175), திருப்பதி - மன்னார்குடி (16407), திருப்பதி - ராமேஸ்வரம் (16779), வாரணாசி - ராமேஸ்வரம்(14260) போன்ற ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நிறுத்தப்பட வேண்டும்.
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் பயணிகள் அதிகமாக உள்ள நிலையமாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரம் ரயில் நிலையம், சென்னை எக்மோர், சென்ட்ரல் ஆகியவற்றை அடுத்து மூன்றாவது முனையமாக சென்னை ரயில்வேயினால் ஆக்கப்பட்டுள்ளதால் கடலூர் - தாம்பரம் ரயில் புதியதாக இயக்க வேண்டும்.
அதேப்போன்று சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில், திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்கவும், மயிலாடுதுறை - கோயமுத்தூர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்கவும், காட்பாடி - விழுப்புரம் ரயிலை முதுநகர் வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: