கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ப்பணிகளை ஆய்வு செய்வதற்காக 683 கிராமங்களிலும் சமூக தணிக்கை குழுக்கள் அமைக்கப்படுகிறது.
முறைகேடுகளை தடுக்க
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வங்கிகள் மூலம் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல் மற்றொரு நடவடிக்கையாக இத்திட்டப்பணிகளை சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும் சமூக தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.
7 உறுப்பினர்கள்
ஒவ்வொரு குழுவிலும் 7 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரின் நெருங்கிய உறவினராக இருக்கக்கூடாது. இக்குழுவின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு முன்பு அதுபற்றிய அறிவிப்பு அந்தந்த கிராமங்களில் வெளியிடப்படும். இதில் சேர ஆர்வமுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்கள் அதே பஞ்சாயத்தில் தணிக்கை செய்ய முடியாது. அருகில் உள்ள பஞ்சாயத்துகளில் தணிக்கை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது பற்றி 15 நாட்களுக்கு முன்னதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளால் சமூக தணிக்கை குழுக்களுக்கு தெரிவிக்கப்படும்.
பயிற்சி
சமூக தணிக்கை பணிகளை கண்காணிக்க உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட அதிகாரிகளுக்கு ஒன்றியம் வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர், அண்ணாகிராமம் ஒன்றிய அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்றக்கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
முகாமுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உதவி திட்ட அதிகாரி கலியபெருமாள் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ஆதவன், வட்டார வளர்ச்சி அதிகாரி கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குனர் மகேந்திரன் வரவேற்று பேசினார். மாநில ஊரக பயிற்சி நிலைய விரிவாக்க அதிகாரி வீரராகவன் சமூக தணிக்கை பற்றி பயிற்சி அளித்தார். பயிற்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மகாலட்சுமி, ராஜசேகர், குமார், சீனுவாசன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீராகோமதி, சுதா, மோகனாம்பாள், சக்தி, ராஜாராம் மற்றும் கடலூர், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment