Monday, September 30, 2013

கெடிலம் ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா? : மழைக் காலத்தில் வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம்

கடலூர் நகர் வழியாக ஓடும் தென்பெண்ணை, கெடிலம் நதிக்கரையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் வெள்ள நீர் தடுக்கப்பட்டு ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வடிகால் மாவட்டமாக இருப்பதால் பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை கடந்து வரும் வெள்ளம் கடலூர் கடலில்தான் கலக்கிறது. கடலூர் நகர் வழியாக கெடிலம் ஆறும், நகரின் ஓரத்தில் தென்பெண்ணையாறும் ஓடுகிறது. இவ்விரு நதிகளும் கடலூர் நகருக்கு வரப்பிரசாதமான ஒன்றாகும்.
"வாணலியில் வெண்ணை உருகும் முன், பெண்ணையில் வெள்ளம்பெருகும்' என்பது முதுமொழி. அந்தளவுக்கு விரைவாக தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நகருக்குள் ஓடும் கெடிலம் ஆற்றில் பண்ருட்டி சுற்றுப்பகுதியில் பெய்யும் மழை உடனடியாக ஓடிச்சென்று கடலில் கலக்கிறது. இவ்விரு ஆறுகளிலும் நகர எல்லையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மணற்பாங்கான இடங்கள் காணாமல் போய்விட்டன.அரைகுறையாக இருந்த இடங்களில் எல்லாம் மாட்டுவண்டிக்காரர்கள் மணலை பெருக்கி கூட்டி நள்ளிரவில் கடத்தி செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது. இதனால் கெடிலம், பெண்ணையாற்றில் களிமண் நிலமாக மாறிவிட்டது. மணற்பாங்கான இடங்களில் வேர்களில் இறுகுத்தன்மை இல்லாததால் இவ்வளவு காலமாக தாவரங்கள் வளராமல் இருந்தன. தற்போது நிலமை மாறிவிட்டதால் தாவரங்கள் வளர்வதற்கேற்ற மண்வளம் பெருகியுள்ளன.இதன் காரணமாக இவ்விரு ஆறுகளிலும் கருவேல முள்மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி தருகின்றன. அடுத்த மாதம் துவங்கவுள்ள வடகிழக்கு பருவ மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அவை கடலில் சென்று வடிய முடியாமல் கருவேல மரங்கள் தடுக்கப்படுவதால் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தவிர வேறு வழியில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கெடிலம் ஆற்றில் முறையான வடிகால் வசதியின்மையால் சுப்ராயலு நகர், லாரன்ஸ் ரோடு, நெடுஞ்சாலை நகர் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து குடியிருக்கும் மக்கள் வெளியேறினர். அதேப்போல பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலில் சென்று வடியமுடியாமல் ஆற்றுப்படுகையில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்கள் நாசமானதோடு, நில அரிப்பு ஏற்பட்டது.மாவட்ட நிர்வாகம் பருவமழையில் இருந்து தப்பிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் கடலூர் நகருக்கு முக்கிய பிரச்னையாக உள்ள வடிகால் வசதியை முறையாக ஏற்படுத்த பொதுப்பணித்துறை இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதை செய்வதற்கு அரசுக்கு பெரிய அளவில் செலவினம் கிடையாது.துவக்க காலத்திலேயே பெருகி வரும் வெள்ள நீரை முறையாக கடலில் வடிய விடுவதன்மூலம் கிராமங்களில் தண்ணீர் புகுவதை முழுமையாக தடுக்க முடியும். இனியாவது மாவட்ட நிர்வாகம் இதை கவனிக்குமா?

No comments: