Wednesday, September 11, 2013

கடலூர் கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்

பொதுக்கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், வி.சி., கட்சித் தலைவர் திருமாவளன் உட்பட, நான்கு பேருக்கு, நேற்று கடலூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.கடலூர் அடுத்த புதுக்கடையில், கடந்த 1997ம் ஆண்டு நடந்த வி.சி., கட்சி பொதுக் கூட்டத்தில், கட்சித் தலைவர் திருமாளவன், நிர்வாகிகள் திருவள்ளுவன், புதுச்சேரி, பூமியான்பேட்டை அமுதவன், கீழ்குமாரமங்கலம் சித்திரைமூர்த்தி ஆகியோர், வன்முறையைத் தூண்டும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக, ரெட்டிச்சாவடி போலீசார், கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் (2)ல் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, திருவள்ளுவன், சித்திரைமூர்த்தி ஆகியோர் மட்டும் ஆஜராயினர். ஆஜராகாத திருமாவளவன், அமுதவன் ஆகியோர், கோர்ட்டில் ஆஜராகி, குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுச் செல்லுமாறு, மாஜிஸ்திரேட் பிரபாவதி உத்தரவிட்டார்.அதன்படி, திருமாவளவன் உட்பட நான்கு பேர், நேற்று காலை 11:25 மணிக்கு, மாஜிஸ்திரேட் பிரபாவதி முன் ஆஜராயினர். அவர்களுக்கு, குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கி,விசாரணை நடத்தப்பட்டது. நான்கு பேரும், இது பொய் வழக்கு என கூறினர். வழக்கு விசாரணையை, வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.பின்னர் வெளியே வந்த திருமாளவன் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த 97ம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு 13 ஆண்டுகளுக்குப் பின் விசாரணைக்கு வருகிறது. தமிழக காவல் துறையின் மெத்தனப் போக்கிற்கு இதுவே சாட்சி. இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதனை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்.இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது. கச்சத்தீவை மீட்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 12ம் தேதி வி.சி., கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்றார்.

No comments: