குறுவை அறுவடை முடிந்து, சம்பா சாகுபடி துவங்கியுள்ள நிலையில் நெல்லுக்கான ஆதார விலையை தமிழக அரசு அறிவிக்காமல் உள்ளது விவசாயிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.பொது வினியோகத் திட்டத்திற்காக மத்திய அரசு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லை மாநில அரசு மூலமாக கொள்முதல் செய்து வருகிறது. இதற் காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தில் நெல் விலையை அறிவிக்கும். அதனைத் தொடர்ந்து மாநில அரசு ஆதார விலையை அறிவிக்கும்.இதன்படி தமிழகத்தில், மத்திய அரசுக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக குறுவைப் பட்டத்திற்கு ஆகஸ்ட் மாதமும், சம்பா பட்டத்திற்கு டிசம்பர் மாதம் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.இவ்வாறு 2013-14ம் ஆண்டு நெல்லுக்கான விலையை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதில் முதல் ரகம் குவிண்டால் 1,350 ரூபாய், இரண்டாம் ரகம் 1,300 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது கடந்தாண்டை விட குவிண்டாலுக்கு 70 ரூபாய் கூடுதலாகும். இந்த விலையோடு, ஆதார விலையை தமிழக அரசு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மாநிலத்தில் குறுவை சாகுபடி முடிந்த நிலையிலும், இன்னமும் நெல்லுக்கான ஆதார விலையை அறிவிக்கவில்லை.மாநிலத்தில் கடந்தாண்டு நிலவிய வறட்சி காரணமாக குறுவை சாகுபடி பெருமளவு குறைந்தது. இதன் காரணமாக, நெல் விலை வெளி மார்க்கெட்டில் உயர்ந்தது. உதாரணத்திற்கு, பொன்னி மற்றும் பி.பி.டி., ரக நெல் குவிண்டால் 1,400 ரூபாயிலிருந்து 1,700 ரூபாய் வரை விலை போகிறது. அரசு நிர்ணய விலையை விட, வெளிச்சந்தையில் கூடுதலாக விலை கிடைத்ததால் விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரவில்லை. மாநிலத்தில், குறுவை சாகுபடி அறுவடையும் முடிந்து, தற்போது சம்பா சாகுபடிக்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.ஆனால் தமிழக அரசு இன்னமும் , நெல்லுக்கான ஆதார விலையை அறிவிக்காமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, விவசாய தொழிலாளர்களுக்கான கூலி, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, நெல்லுக்கான ஆதார விலையை விரைவில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

No comments:
Post a Comment