Wednesday, September 11, 2013

ரூ.160 கோடியில் 20 அதிவேக ரோந்து படகுகள்

 கடலூர் துறைமுக பகுதியில், கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, அனைத்து கடற்கரை கிராமங்களில் விஜிலென்ஸ் கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கிராமத்திலும் தலா 5 பேருக்கு மொபைல்போன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தேக நபர்கள் குறித்து தெரிவிக்க முடியும்.தமிழகத்தில் 12 கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. தற்போது புதிதாக 30 காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடலூரில் "தானே' புயலால் பழுதடைந்த 2 அதிவேக ரோந்து படகுகளுக்கு பதிலாக புதிய படகுகள் வழங்கப்படும்.கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 8 கோடி ரூபாய் மதிப்பில் 20 புதிய அதிவேக ரோந்து படகுகள் வாங்க 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு நடந்த 16 படகு விபத்துகளில் 49 மீனவர்கள் கடலோர பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்; 10 பேர் இறந்துள்ளனர். இந்தாண்டு இதுவரை 22 விபத்துகளில் 110 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்; 12 பேர் இறந்துள்ளனர். ஆஸ்திரேலியா தப்ப முயன்று, நடுக்கடலில் தவித்த இலங்கை அகதிகள் 120 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார். எஸ்.பி., ராதிகா, துறைமுக அதிகாரி அன்பரசன், டி.எஸ்.பி., சுந்தரவடிவேலு உடனிருந்தனர்.

No comments: