Monday, September 16, 2013

கடலூர் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

கடலூர் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் அன்றாடம் குவியும் குப்பைகளை தினமும் அள்ளி அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
துப்புரவு பணியாளர்கள்
கடலூர் நகராட்சி பகுதியில் 45 வார்டுகளிலும் தெருக்கள், சாலைகள், பஸ்நிலையங்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவற்றில் சில வார்டுகளில் துப்புரவு பணியை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடலூர் நகரில் அனைத்து வார்டுகளிலும் தினமும் குப்பைகள் அள்ளப்படுகிறதா? குப்பை கழிவுகள் நிரம்பி அடைத்து நிற்கும் சாக்கடை கால்வாய்கள் சீரமைக்கப்படுகிறதா என்றால் ஒய்யாரக் கொண்டையிலே தாளம் பூவாம் அதன் உள்ளே இருக்குதாம் ஈரும் பேனும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
ஆம், தினமும் பஸ்நிலையம், பாரதிசாலை, நேத்தாஜி சாலை மற்றும் முக்கிய அரசு அலுவலக வளாகங்களில் மட்டும்தான் தினசரி துப்புரவு பணி மேற்கொள்வதை காண முடிகிறது. நகராட்சி சாலைகள், தெருக்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை பார்த்தால் குப்பைகள் நிரம்பி இது குப்பை சேகரிக்கும் நிலையமா, குப்பை அள்ளும் இடமா என்ற சந்தேகம் வந்துவிடும். இதை நிரூபிக்கும் வகையில் கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார்கோவில் தெரு, ராம்தாஸ் நாயுடு தெரு சந்திப்பில் நேற்று குப்பைகள் நிரம்பி சாலையில் பரந்து விரிந்தும், ஆடு, மாடுகள் மேய்ந்து அருவருக்கதக்க நிலையில் கிடந்ததை காண முடிந்தது.
3 நாட்களுக்கு ஒரு முறை
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் குணா கூறும்போது புதுப்பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் இங்குதான் கொட்டிச் செல்கிறார்கள். பின்னர் அந்த குப்பைகளை நகராட்சி குப்பை லாரிகளில் ஏற்றி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் இங்கு குவியும் குப்பைகளை தினமும் அள்ளப்படுவது இல்லை. 3 நாள், 5 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகளை அப்புறப்படுத்துகிறார்கள். இதனால் குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. 24 மணி நேரமும் ஆள் நடமாட்ட முள்ள இந்த பகுதியில் இதுபோன்ற அவல நிலை இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே தினமும் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
அதேபோல ஆள் நடமாட்டம் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி சென்று வரும் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெருவிலும் வாரம் ஒரு முறைதான் குப்பைகள் அள்ளப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான வார்டுகளில் இது போன்ற புகார்கள் உள்ளன. குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள், தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகளால்தான் கொசுக்கள் மற்றும் ஈ–க்களின் பெருக்கம் அதிகமாகி மலேரியா, காலரா, வயிற்று போக்கு, யானைக்கால் போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாய நிலை உருவாகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வெள்ளம் வருமுன் அணை போட வேண்டும் என்பார்கள். அதுபோல கொடிய நோய்களின் தாக்கத்தின் பிடியில் இருந்து தப்பிக்க நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. எனவே கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வார்டுகளில் குப்பைகள் சரியாக அள்ளப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்பி கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமித்து அனைத்து வார்டுகளிலும் தினமும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மையான நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடலூர் நகர மக்களின் விருப்பமாக உள்ளது.

No comments: