Wednesday, September 18, 2013

அரசு அமைத்த கைபம்ப் திருட்டு கடலூரில் மர்ம ஆசாமிக்கு வலை

கடலூரில் வறட்சியை சமாளிக்க முதல்வரின் சிறப்பு நிதியில் அமைக்கப்பட்ட கைப்பம்பை திருடிய ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
தமிழகத்தின் கடந்தாண்டு பருவமழை பெய்யாததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பல கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. அதனையொட்டி கடந்த கோடை காலத்தில் நிலமையை சமாளிக்க கிராமங்களில் கைப்பம்புகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக முதல்வர் சிறப்பு நிதி ஒதுக்கினார். அதன்படி ஒவ்வொரு ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 15 ஆயிரம் ரூபாய் செலவில் 20 இடங்களில் கைப்பம்புகள் அமைக்கப்பட்டன. இது பல இடங்களில் பெயரளவிற்கே அமைக்கப்பட்டது.
இவ்வாறு கடலூர் ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கடந்த ஜூன் மாதம், அவசரமாக கைப்பம்புகள் அமைக்கப்பட்டது. இதனை பெரும்பாலானாவை மக்கள் பயன்பாடின்றி வெறும் காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், கூத்தப்பாக்கம் எல்.ஐ.சி., நகரில் அமைக்கப்பட்டிருந்த கைப்பம்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன் மர்மமான முறையில் திருடு போனது. இந்த கைப்பம்பு, பூமியில் இறக்கிய குழாயுடன் உருவி எடுத்துச் சென்றிருப்பது, அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி ஒன்றிய கவுன்சிலரின் கணவர், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார், அரசு அமைத்த கைப்பம்பை திருடிய மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர். 

No comments: