Wednesday, September 18, 2013

விவசாயியிடம் லஞ்சம் மின் வாரிய அதிகாரி கைது

மின் இணைப்பிற்கு விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய, மின்பாதை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (55). விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மோட்டாருக்கு மின் இணைப்பு பெற, வேப்பூர் இளமின் பொறியாளர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தார்.
வேப்பூர் துணை மின் நிலைய மின் பாதை ஆய்வாளர் அசோகனிடம், மின் இணைப்பு குறித்து கேட்டதற்கு, அவர், 8,500 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
குழந்தைவேல், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆலோசனைப்படி, நேற்று வேப்பூர் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் இருந்த, மின்பாதை ஆய்வாளர் அசோகனிடம் 7,500 ரூபாயை குழந்தைவேல் கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் திருமால், திருவேங்கடம் தலைமையிலான போலீசார், மின் பாதை ஆய்வாளர் அசோகனை லஞ்சப் பணத்துடன் பிடித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். 

No comments: