Tuesday, September 10, 2013

கர்நாடகா அரிசி வரத்தால் விலை...குறைகிறது : ஸ்டீம் அரிசிக்கு கடும் "கிராக்கி'

கடலூர்:கர்நாடகா மாநில அரிசி வருகை அதிகரிப்பால், தமிழகத்தில் உயர்ந்து வந்த அரிசி விலை குறைந்து வருகிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் காவிரி டெல்டா பகுதியில் அபரிமிதமான விளைச்சல் தரும் சம்பா போகம் கடும் பாதிப்பிற்குள்ளானது. நிலத்தடி நீர் உள்ள தாலுகாக்களில் மட்டும் நெல் விளைச்சல் இருந்தது. இதனால் நெல் விலை கடுமையாக உயர்ந்தது.மார்க்கெட்டில் உயர்ந்து வரும் அரிசி விலையைக் குறைக்க தமிழக அரசு மலிவு விலை அரிசியை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்தது. இதற்காக நுகர்பொருள் வாணிபக் கடைகள் மட்டுமல்லாமல் கூட்டுறவு அங்காடிகள் மூலம் அரிசி விற்பனை செய்யப்பட்டது.மலிவு விலை அரிசிஆனால், தரமில்லாத அரிசி விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் வரவேற்பில்லாமல் போனது. இதனால் மலிவு விலை அரிசி படிப்படியாக விற்பனை மந்தமானது. தற்போது சி.ஆர்.1009 என்ற இட்லி அரிசி மட்டும் விற்பனையாகிறது. அதுவும் மாவட்டம் முழுவதும் 500 கிலோ மட்டுமே விற்பனையாகிறது. இதனால் வெளி மார்க்கெட்டில் அரிசி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.கர்நாடகா அரிசி வரத்து
இந்நிலையில், தற்போது கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி தமிழகத்திற்குள் வரத் துவங்கியுள்ளன. இதன் விளைவாக அரிசி விலை கனிசமாக குறைந்துள்ளது. ஏற்கனவே விற்பனையான பி.பி.டி., அரிசி கிலோ 44 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக குறைந்துள்ளது.அதேப்போல டீலக்ஸ் கிலோ 38லிருந்து 30 ரூபாயாக குறைந்துள்ளது. ஐ.ஆர்.50 ரகம் 30 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைந்துள்ளது. கர்நாடகா அரிசியில் இரு வேறு அரிசி ரகங்கள் கலப்படம் செய்யப்பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநில அரிசி என்பதால் அதற்கு "சோனா' என பெயரிடப்பட்டு விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.ஸ்டீம் பாயில் அரிசிவெளி மாநில அரிசி விலை குறைந்திருந்த போதிலும், உள்ளூர் அரிசியின் விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. புதிய நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் அரிசியே இந்த விலைக்குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 
கர்நாடகாவில் நெல்லை ஊறல் போட்டு அவியல்போட்டு உருவாக்கப்படும் அரிசி தரமாக இருப்பதோடு, நீண்ட நேரம் கெடாமல் இருக்கும் தன்மைகொண்டது.ஆனால், அதிக நேரம் வேக வைக்க வேண்டியுள்ளதால் இல்லத்தரசிகள் இதுபோன்ற அரிசியை விரும்புவதில்லை. ஆனால், நெல்லை ஊறல் போடாமலேயே நீராவியைக் கொண்டு வேகவைத்து அரைக்கப்படும் அரிசி, குறைந்த நேரத்தில் சாதம் தயாரிக்க முடிகிறது என்பதால் ஸ்டீம் அரிசியை விரும்பி வாங்கும் நிலை உள்ளது.இதனால் உள்ளூரில் தயாரிக்கப்படும் அரிசி கிலோ ஒன்று 3 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. குறுவை அறுவை துவங்கினால் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

No comments: