Friday, September 13, 2013

குடிநீரில் கழிவுநீர் கலப்பால் வயிற்றுப் போக்கு மருத்துவக்குழு சிகிச்சை

ஸ்ரீமுஷ்ணம் அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிகிச்சையளித்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு, நேற்று முன்தினம் இரவு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த விக்டோரியா, சேவியர், கலைவாணி உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். உடன் அனைவரும் பாளையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். 
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் 
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று பாளையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில் தலைமையில் 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு ஆய்வு செய்து கிராம மக்களுக்கு சிகிச்சையளித்தனர்.
இதில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பைப் லைனில் கழிவுநீர் கலந்திருப்பது தெரியவந்தது. உடன் சீரமைக்கப்பட்டது.
மேலும், அனைத்து குடிநீர் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு குளோரினேஷன் செய்யப்பட்டது. வீதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றும் பணி நடந்தது.
சுகாதாரத் துறையினர் வலசக்காடு கிராமத்தில் தங்கி சிகிச்சையளித்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் தாசில்தார் வெங்கடாசலம் கிராமத்திற்குச் சென்று பார்வையிட்டு சுகாதாரப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

No comments: