கடலூர் மாவட்டத்தில், புதிதாக நான்கு இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசுக்கு தீயணைப்புத் துறை பரிந்துரை செய்துள்ளது.தமிழகத்தில், இயற்கை சீற்றம் மற்றும் தீ விபத்தின் போது, மீட்புப் பணியில் ஈடுபடுவது தீயணைப்புத் துறையினரின் முக்கிய பங்காக உள்ளது. தமிழகம் முழுவதும் 304 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் என மொத்தம் 15 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிகின்றனர்.
இம்மாவட்டத்தில், பெரும்பாலான தீயணைப்பு நிலையங்கள் நகரப் பகுதியில் அமைந்துள்ளன. இதனால், கிராமங்களில் தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, நகரப் பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் குறைந்த பட்சம் 10 கி.மீ., தூரத்திற்கு மேல் வாகனம் கடந்து செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. தீயணைப்பு நிலைய வாகனம் செல்வதற்குள், பொதுமக்களே தீயை அணைத்து விடுகின்றனர். உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போகிறது.இதற்கு, கிராமங்களில் போதிய அளவில் தீயணைப்பு நிலையம் இல்லாதது ஒரு காரணமாக உள்ளது. எனவே, சேத மதிப்பை குறைக்கும் பொருட்டு, தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தில் 2011ம் ஆண்டு 1,621, 2012ம் ஆண்டு 2,677 தீ விபத்துகள் நடந்துள்ளது.இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிராமங்களில் போதிய அளவில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், தீ விபத்துகளில் அதிகளவில் சேதங்கள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, நடுவீரப்பட்டு, புவனகிரி, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பரிந்துரை கடிதத்தில் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தொகை, கோவில் திருவிழாக்கள், தீ விபத்துகள் எண்ணிக்கை, சேத மதிப்பீடு, தற்போது இயங்கும் தீயணைப்பு நிலைய வாகனம் எத்தனை கி.மீ., தூரம் கடந்து வர வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்' என்றார்.

No comments:
Post a Comment