கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரிக்கு தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
தனியார் மகளிர் கல்லூரி
கடலூர் செம்மண்டலத்தில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2 ஆயிரத்து 400 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கல்லூரி திறக்கப்பட்டது. மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தனர். அதன்பிறகு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. காலை 11.30 மணி அளவில் கல்லூரி முதல்வர் மல்லிகா, தனது அலுவலகத்துக்கு வந்த தபால்களை ஒவ்வொன்றாக பிரித்து படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது பெயருக்கு வந்த ஒரு தபாலில் வாழ்க வளமுடன் என்று எழுதப்பட்டு இருந்தது.
மிரட்டல் கடிதம்
இதனால் அந்த கடிதத்தை அவர் ஆர்வமுடன் படித்து பார்த்தார். அப்போது தான் அது வாழ்த்து கடிதம் அல்ல. வெடிகுண்டு மிரட்டல் கடிதம் என்று தெரிந்தது. அந்த கடிதத்தில், நான் ஒரு தீவிரவாத குழுவை சேர்ந்தவன். நான் உங்கள் கல்லூரியில் 4 இடங்களில் தானியங்கி வெடிகுண்டுகளை வைத்து இருக்கிறேன்.
அந்த வெடிகுண்டு சரியாக பகல் 12.15 மணிக்கு வெடிக்கும். மிகவும் வலிமையான, சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அவை. அந்த குண்டுகள் வெடித்தால் 4 கிலோ மீட்டருக்கு சத்தம் இருப்பதுடன், கடலூரில் உள்ள ஒரு பகுதி மக்களுக்கு துரதிஷ்டம். இது பொய் செய்தி கிடையாது. இப்படிக்கு பி.ஆர்.ஓ.–2, தீவிரவாத குழு– 786, இல்லா – அலி இயக்கம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மாணவிகள் ஓட்டம்
இந்த கடிதத்தை படித்ததும் பதற்றம் அடைந்த கல்லூரி முதல்வர் மல்லிகா, உடனடியாக இது குறித்து மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக மாணவிகளை வெளியேற்ற உத்தரவிட்டதுடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகாவுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அனைத்து கல்லூரி மாணவிகளையும் பாதுகாப்பாக வெளியே செல்லுமாறு கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். சம்பவம் அறிந்த மாணவிகள் அலறி அடித்தபடி கல்லூரியை விட்டு ஓட்டம் பிடித்தனர். கல்லூரி ஆசிரியர்களும் அவசரம், அவசரமாக வெளியேறினர்.பின்னர் கடலூர் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய் சிம்பாவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பரபரப்பு
அவர்கள் கல்லூரி நுழைவு வாயில், அரங்கம், வகுப்பறை, மேல் தளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தீவிரமாக சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேர சோதனைக்கு பிறகே வெடி குண்டு மிரட்டல் கடிதம் வெறும் பீதி என்று தெரிய வந்தது. அதன்பிறகே ஆசிரியர்கள், மாணவிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்ட கல்லூரி மாணவிகளை படத்தில் காணலாம்.

No comments:
Post a Comment